காட்டாங்குளத்தூர், நவ.,25
எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தின் தமிழ்ப்பேராயம் சார்பில் 11 லட்சம் ரூபாய் மதிப்பில் 10 தமிழ் அறிஞர்களுக்கு காந்திய நெறியாளர் தமிழருவி மணியன், எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் இணைந்து விருதுகளை வழங்கினர்.
இந்தியாவில் உள்ள மிகப் பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனமானது, தமிழ்மொழி வளர்ச்சி குறித்த விழிப்புணர்ச்சியை உலகம் முழுவதும் உருவாக்கும் நோக்கத்துடன் 2010 ஆம் ஆண்டு தமிழ்ப்பேராயம் என்ற அமைப்பை உருவாக்கியது. அதன்படி, தமிழ் மொழியில், எழுத்தில் சிறந்து விளங்கும் படைப்பாளர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா நேற்று (24.11.2022) நடைபெற்றது.
எஸ்.ஆர்.எம் குழுமம் நிறுவனர் பாரிவேந்தர் முயற்சியில் சிறிய அளவில் தொடங்கிய கல்வி நிறுவனமானது, இந்தியா முழுவதும் இன்று பரந்து விரிந்துள்ளது. இது, சாதாரணமானது அல்ல. சாதனையானது. அத்தகைய கல்விக் குழுமத்தின் மூலம் உருவான தமிழ்ப் பேராயம் என்ற அமைப்பானது தமிழ் அறிஞர்களுக்கு நேர்மையாக, எந்த தலையீடும் இல்லாமல் விருது வழங்கப்படுவது பெருமைக்குரியது. இது, சாகித்திய அகாடமி விருதுகளை விட சிறந்தது. தமிழ் அறிஞர்களைக் காக்க தமிழன் தவறிவிட்டான். ஆனால், எஸ்.ஆர்.எம் அந்தத் தவறை செய்யாமல் ஒவ்வொரு படைப்பாளர்களையும் விருதுகள் வழங்கி லட்சாதிபதியாக்கியுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 800 கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் முகமாக இருப்பது மொழி, முகவரியாக இருப்பது இனம். அத்தகைய முகத்தையும், முகவரியையும் நாம் காக்க வேண்டும். வேற்றுமொழிக்காரர்கள் எங்கு சென்றாலும், அவர்களது வீடுகளில் தாய் மொழியை பேசுகின்றனர். ஆனால், தமிழர்கள் தமிழ் மொழியில் பேசுவதை மதிப்பு குறைவாக நினைக்கின்றனர். இதனால்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் அந்நாட்டவர்களாகவே மாறிவிடுகின்றனர். ஆனால், உலகிலேயே உயரிய நிலையை கொண்ட ஒரே மொழி தமிழ் என்பதை மறந்துவிடுகின்றனர்.
ஜெர்மனியாளர்கள் தங்களின் மொழியில் சொற்கள் இல்லையென்றால் கிரேக்கம், லத்தீன், இப்ரூ மொழியில் இருந்து சொற்களை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், எந்த மொழியின்
உதவியும் இன்றி தனித்து விளங்கக் கூடிய ஒரே மொழி தமிழ் மொழிதான். உலகம் முழுவதும் பரவியுள்ள பல மொழிகளுக்கு வேர்ச் சொல்லாகவும் தமிழ் மொழி இருந்துள்ளது. அத்தகைய தமிழ் மொழியின் பழமையை மட்டும் நாம் பேசிக்கொண்டிருக்காமல், காலத்திற்கு ஏற்ப நவீனப்படுத்தி, மக்கள் பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.
இந்தியாவில் 1,500 மொழிகள் வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால், இந்திய அரசாங்கத்தால் 22 மொழிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், மற்ற மொழிகள் மிகக் குறைவாகவே பேச்சு வழக்கில் உள்ளது. அந்த நிலை தமிழ் மொழிக்கு வரக் கூடாது. அதனால், தமிழ் மொழியை பேசி பழக வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும், இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை கொண்டு வர வேண்டும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், திருவள்ளுவர், தொல்காப்பியர் விருதுகளை ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, எஸ்.ஆர்.எம் நிறுவனர் பாரிவேந்தர் தலைமையுரை ஏற்று பேசுகையில், தமிழ்ப் பேராயம் சார்பில் ஆண்டுதோறும் தமிழ் அறிஞர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது. இதில், என்னுடைய தலையீடு ஏதும் இல்லாமல் ஆகச் சிறந்த அறிஞர்களின் குழு மூலம் சிறந்த படைப்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எஸ்.ஆர்.எம் குழுமம் மூலமாக விருது பெறுவோர் நேரடியாக மத்திய அரசின் விருது பெறுவதற்கு சமமான திறமை கொண்டவர்களாக இருப்பர். தமிழ்ப் பேராயத்தில் விருது பெறுவதற்கு சுமார் 3 ஆயிரம் புத்தகங்கள் போட்டியிடுகின்றது. அதில், சிறந்த படைப்பாளர்கள் மட்டுமே தேர்வு செய்து நேர்மையாக விருது வழங்கப்படுகிறது.
மாணவர்களின் கல்விக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கல்லூரியைத் தொடங்கினேன். இன்று, 35 கல்லூரிகளாகவும், 5 பல்கலைக்கழகங்களாகவும் தானாகவே வளர்ச்சி அடைந்ததுள்ளது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும், தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்ப் பேராயம் உருவாக்கப்பட்டது. அந்த நோக்கத்திற்கு எற்ப, மிகச் சிறந்த தமிழ் அறிஞர்களைக் கண்டறிந்து, விருது வழங்கி ஊக்கப்படுத்தப்படுகின்றனர். அதுபோல, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக கட்சியைத் தொடங்கினேன். மக்களுக்கு சேவை செய்து வருகிறேன்.
நான் என்றைக்கும் பணத்திற்கும், புகழுக்கும் ஆசைப்பட்டவன் கிடையாது. என் கையில் எப்போது பணம் வைத்திருந்தது கிடையாது. ஆனால், இதனை யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், அதுதான் உண்மை. அதேபோல, காந்திய நெறியாளர் தமிழருவி மணியனும் பணம், புகழுக்கு ஆசைப்படாதவர். சிறந்த தமிழ் அறிஞர், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற 11 தலைவர்களைப் பற்றி சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இந்த, தமிழ்ப் பேராய விருது வழங்குவதற்கான சிறந்த ஆளுமையாக திகழ்கிறார் என்றார். மேலும், தமிழ்ப் பேராய விருதுகளைப் பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, எஸ்.ஆர்.எம் நிறுவனர் பாரிவேந்தர், காந்திய நெறியாளர் தமிழருவி மணியன் ஆகியோர் இணைந்து, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது வடசென்னை என்ற நூலுக்காக நிவேதிதா லூயிஸ்க்கும், பாரதியார் கவிதை விருதை வேட்டுவம் நூறு நூலுக்காக மௌனன் யாத்ரிக்காவுக்கும் அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருதை உதை பந்து எழுதிய ஏ. ஆர். முருகேசன் மற்றும் மலைப்பூ நூலுக்கு விழியன் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து,
ஜி.யூ. போப் மொழிபெயர்ப்பு விருதை யாதும் ஊரே என்ற நூலுக்காக சித்தார்த்தனுக்கும், அப்துல் கலாம் அறிவியல் தமிழ் மற்றும் தொழில்நுட்ப விருதை தமிழர் மருத்துவம் குறித்து எழுதிய சிவகடாட்சம் என்பவருக்கும் பரிதிமாற் விருதை தமிழ் ஆய்வறிஞர் விருதை கவிதை மரபும் தொல்காப்பியமும் என்ற நூலுக்காக குருநாதன் என்பவருக்கும்,
முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருதை தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார் என்ற நூலுக்காக கருவூர் கன்னல் என்பவருக்கும், உலகத்தலைவர் அண்ணல் அம்பேத்கார் விருதை குடந்தை பாலு என்பவருக்கும், சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருதை மணல் வீடு என்ற நூலுக்காக அரிகிருஷ்ணன் என்பவருக்கும் வழங்கப்பட்டது.
அதேபோல, தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதை புதுவை தமிழ்ச் சங்கம் முத்துவிற்கும், பாரிவேந்தர் பைந்தமிழ் விருதை சிற்பி பாலசுப்ரமணியத்திற்கும் வழங்கப்பட்டது. இதில், பாரிவேந்தர் பைந்தமிழ் விருது பெற்றவருக்கு 3 லட்சம் ரூபாயும், மற்ற படைப்பாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், தொல்காப்பியம், சுதேசமித்திரன் விருது பெற்றவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 11 லட்சம் ரூபாய் விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில், எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயத்தின் தலைவர் கரு. நாகராஜன், பதிவாளர் பொன்னுசாமி, திட்டப் பணிக்குழுத் தலைவர் மதியழகன் ஆகியோர் உடனிருந்தனர்.