இருதயமாற்று அறுவை சிகிச்சை மருத்துவர்,பயனாளிக்கு பாராட்டு விழா

தாம்பரம், மே 7:
சென்னையில் 14 ஆண்டுகளுக்கு முன் இருதய‌ மாற்று அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற பயனாளி மற்றும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.கடந்த 2009 ஆம் ஆண்டு சேலத்தில் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்த இளைஞரிடமிருந்து பெறப்பட்டு இருதயத்தை சென்னையில் இருதயமாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு மறுவாழ்வு பெற்ற பயனாளி ஜி.மணி மற்றும் அவருக்கு இருதயமாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் என்.மதுசங்கர் ஆகியோ ரை ஏவுகணை விஞ்ஞானியும்,பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனருமான சிவதாணு பிள்ளை பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாத காலக்கட்டத்தில் மூளைச்சாவு ‌மூலம் உயிரிழந்த இளைஞரிடமிருந்து பெறப்பட்ட ‌இருதயத்தை பொருத்தியதன் மூலம் உயிர் பிழைத்து நம் முன் உதாரண மனிதராக வாழ்ந்து வரும் பயனாளி ஜி.மணி, அவருக்கு அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்து இருக்கும் இருதய மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் என்.மதுசங்கர் ஆகிய இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.மறுவாழ்வு பெற்று இருக்கும் மணி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற என்னைப் போல் பலரும் மறுவாழ்வு பெற வேண்டும் என்று பள்ளி, கல்லூரிகளில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரியது.மனித மூளை தவிர அனைத்து உறுப்புகளை உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தமுடியும் என்பதை மருத்துவர்கள் நிரூபித்து வருகின்றனர். மூளை மாற்று அறுவை சிகிச்சை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மருத்துவ விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் அந்த துறையிலும் சாதனை நிகழ்த்தி வாய்ப்புள்ளது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை இருவரும் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.

Chennai