சென்னையில் முகப்பேர் இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நுரையீரல் காசநோய் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் டாக்டர் ராஜீவ் சந்தோஷம், டாக்டர் ராமசாமி ராஜேந்திரன் ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.முகப்பேர் இந்திய மருத்துவர்கள் சங்கம் தலைவரும், கன்னியாகுமரி குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக்கல்லூரியின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவருமான டாக்டர் மது சங்கர் தலைமையில் நடைபெற்ற விழாவில், பிரபல நுரையீரல் சிகிச்சை மருத்துவர் டாக்டர் சந்தோஷத்தின் பேரனும், சந்தோஷம் நெஞ்சக் நோய் மருத்துவமனை மற்றும் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவருமான
டாக்டர் ராஜீவ் சந்தோஷம் நுரையீரல் காசநோய் மருத்துவம், புற்றுநோய் அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர்கள் மத்தியில் காட்சி விளக்கத்துடன் உரை நிகழ்த்தினார்.அப்போது அவர் இந்தியாவில்
நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும் காசநோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
நாட்டில் 1 லட்சம் பேரில் 188 பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.தற்போது காசநோய் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சுமார் 23,12956 பேர் என்பதும்,ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை 19 சதவீதமாக அதிகரித்து வருவதும் தெரிய வந்துள்ளது.இவர்களில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக உயிரிழக்கும் காசநோயாளிகளின் எண்ணிக்கை 28.3 சதவீதம் ஆகவும் உள்ளது.மருந்து மாத்திரை, ஊசி மருத்துவத்திற்கு கட்டுப்படாத இடைவிடாமல் தொடர்ந்து சளி இருமல்,மார்பு மற்றும் பின்புறம் முதுகில் வலி, உள்ளிட்ட சில அறிகுறி உள்ள காசநோயாளிகள் ஆரம்ப நிலையில் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய நுரையீரல் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியம். நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் உரிய அறுவை சிகிச்சை மூலம் குணமாக்க முடியும் என்று கூறினார்.நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவர் ராமசாமி ராஜேந்திரன் பேசுகையில், பெரும்பாலும் புகைப் பழக்கம் உள்ள காசநோயாளிகள் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாவது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.நுரையீரல் புற்றுநோய்பாதிப்புக்குள்ளான காச நோயாளிகளை அறுவை சிகிச்சை மூலம் தான் குணமாக்க முடியும் என்றார்.விழாவில் சிறப்பாக உரை நிகழ்த்திய மருத்துவர்கள் ராஜீவ் சந்தோஷம், ராமசாமி ராஜேந்திரன் ஆகியோருக்கு
முகப்பேர் இந்திய மருத்துவர்கள் சங்கம் தலைவரும், கன்னியாகுமரி குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக்கல்லூரியின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவருமான டாக்டர் மது சங்கர் பூங்கொத்து வழங்கி பாராட்டினார்.மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் கே.கமலக்கண்ணன், பொருளாளர் டாக்டர் சி.செல்வகுமார் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.