ஶ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியின் சார்பில் பல்லாயிரக்கணக்கான மாணவச் செல்வங்கள் பங்கு பெற்ற மாபெரும் ‘‘திருக்குறள் திருவிழா‘‘ மிக விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை ஶ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியைச் சேர்ந்த 10,000 மாணவர்கள் நேரடியாகவும் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஶ்ரீ சைதன்யா பள்ளியைச் சேர்ந்த 40,000 மாணவர்கள் இணைய வழியிலும் மொத்தமாக 50,000 மாணவர்கள் பங்கேற்று 1,330 திருக்குறள்களையும் ஒப்புவித்தல் செய்தனர்.
இந்த விழாவானது சென்னை, தாம்பரம் மேற்கு, சாய்ராம் பொறியியல் கல்லூரி, உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராகவும் தலைமை விருந்தினராகவும் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தார்.
திருக்குறள் தற்கால மாணவர்களுக்கு எவ்வாறு வழிகாட்டியாக அமைகிறது என்பதை சுட்டிக்காட்டி சிறப்புரையாற்றினார். மாணவர்களிடையே உரையாற்றிய அவர் திருவள்ளுவரின் 1,330 குறள்களின் ஆழமான கருத்துகளையும் அர்த்தங்களையும் மாணவர்கள் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் சீரும் சிறப்புமாக இந்த மாபெரும் திருக்குறள் திருவிழாவை நடத்திய ஶ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளிக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந்த விழாவில் ஶ்ரீ சைதன்யா பள்ளியின் இயக்குநர் திருமதி. சீமா போபண்ணா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியோடு பண்பாடு, மொழிப்பற்று மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இவ்விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேலும் பள்ளியின் தமிழ்நாடு செயல்பாட்டுத் தலைவர் திரு.ஜெ.ஹரிபாபு கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தார்.
உலகச் சாதனை நோக்கில் நடைபெற்ற இந்த மாபெரும் திருக்குறள் திருவிழாவில் உலகச் சாதனைப் புத்தக அலுவலர்கள் திருமதி.அங்கிதா ஷா மற்றும் திரு.ரவி ஆகியோர் கலந்து கொண்டு உலகச் சாதனைப் புத்தக நிறுவன சான்றிதழை அளித்தனர்.
மேலும் துணை மேலாளர் சென்னை விமான நிலையம் ஜி விவேகானந்தன் அவர்களும் விழாவில் சிறப்பிக்கப்பட்டார்கள்.
இந்த விழாவில் பள்ளியின் உதவி நிர்வாக மேலாளர்கள், பள்ளி முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் பங்கேற்று இந்த விழாவினைச் சிறப்பித்தனர்.
